ராணிப்பேட்டை: வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் கடந்த இரண்டு நாளாக தமிழ்நாட்டில் கனமழை பெய்தது. இதில் சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள சுற்றுவட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. இதனையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த கனமழையால், நெற்பயிர் கடும் சேதமடைந்தன.
இந்நிலையில், சேதங்களை விரைந்து கணக்கீடு செய்து உரிய நிவாரண வழங்க ஆவணம் செய்ய வேண்டும் என்று வேளாண் அதிகாரிகளுக்கு மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி உத்தரவிட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் பெய்த கன மழையின் காரணமாகவும், மிக்ஜாம் புயல் எதிரொலியாக பெய்த அதி கனமழையால் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், கலவை, திமிரி, ஆற்காடு, நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் போன்ற பல்வேறு பகுதிகளில் சுமார் 1,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பொன்னி, மகேந்திரா, சீரக சம்பா, கோ 51, ஸ்ரீ கிருஷ்னா பொன்னி, ஆர்.என்.ஆர் உள்ளிட்ட நெல்ரக பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சேதமடைந்த நெற்பயிர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கும் வகையில், மாவட்ட வேளாண் துறை அலுவலகம் மூலம் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கலவை அருகே உள்ள சென்னசமுத்திரம் பகுதியில் சேதமான பயிர்களை மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று (டிச. 5) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடும், விரைவில் சேதமடைந்த பயிர்களை கணக்கீடு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.காந்தி அதிகாரிகளிடம் உத்தரவிட்டார். மேலும் அவர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கவிருக்கும் அரசு நிவாரணங்களை ஆவணம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் திருமதி வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கோட்டாட்சியர் மனோன்மணி, வட்டாட்சியர் இந்துமதி ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜே.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட கவுன்சிலர் சிவகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு: களத்தில் இறங்கி நிவாரணப் பொருட்கள் வழங்கிய விஜய் மக்கள் இயக்கம்!