ராணிப்பேட்டை: கடந்த சில மாதங்களாக ராணிப்பேட்டை, வாலாஜா, சிப்காட் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனத் திருட்டு நடைபெற்று வந்தது. இது தொடர்பான புகார்கள் அதிகரித்து வந்தன.
இதனையடுத்து ராணிப்பேட்டை காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பூரணி உத்தரவின்பேரில், ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சாலமன் தலைமையிலான குழுவினர் விசாரணையில் ஈடுபட்டனர். கடந்த மாதம் நடைபெற்ற இரு சக்கர வாகனத்திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சிசிடிவி காட்சியின் உதவியோடு காவல் துறையினர் சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவர், மாதனூர் அடுத்த காலா புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது. மேலும் இவர் குடியாத்தம் பகுதியில் உள்ள அவரது உறவினர் வீட்டில் தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் வீட்டில் பதுங்கி இருந்த தமிழ்ச்செல்வனை கைது செய்து, விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இவர் மீது குடியாத்தம், காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்டப் பல்வேறு காவல் நிலையங்களில் இருசக்கர வாகனத் திருட்டு சம்பந்தமாக வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது. மேலும் ஊரடங்கு காலத்தில் அவசர அவசரமாக கடைகளுக்குச் செல்பவர்கள், இருசக்கர வாகனத்தில் சாவியை மறந்து விட்டுச் செல்வதை நோட்டமிட்டு, அதனைக் கூட்ட நெரிசல் மிக்க பகுதிகளில் சுலபமாகத் திருடி செல்வது இவரது வாடிக்கையாக இருந்து வந்ததும் தெரிய வந்தது.
இதனைத்தொடர்ந்து காவல் துறையினர் அவரிடமிருந்து ரூபாய் 8 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து, அதனை வாகன உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: மின்சார கம்பம் சாயுதா.... ஒரே இடத்தில் அடுத்தடுத்து நடக்கும் விபத்துகள்!