ராணிப்பேட்டை: “உதயநிதி ஸ்டாலின் சிறுபிள்ளைத்தனமாக கருத்துகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்” என
ராணிப்பேட்டையில் அதிமுக மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழாவில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம், காரை கூட்ரோடு பகுதியில் நேற்று (நவ.16) அ.தி.மு.க ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அலுவலக திறப்பு விழா, மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுக துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து கே.பி.முனுசாமி பேசியதாவது, “பெரியார், அண்ணா ஆகியோர் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை எவ்வித வரலாறும் தெரியாமல் பேசி வருகிறார். அவருக்கு நாவடக்கம் தேவை” என்றார். ஓ.பன்னீர்செல்வம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘அரசியலில் அவர் காணாமல் போனவர். அவரைக் குறித்து பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அவர் மன்னிப்பு கடிதம் வழங்கும் பட்சத்தில், தலைமை அதனை பரிசீலனை செய்யும்’ என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரூர் அருகே இயங்கி வரும் தனியார் கல்குவாரியை மூடக்கோரி ஆறு கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய அவர், “தேர்தல் நேரத்தில் தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு விலக்கு கொண்டு வருவதாக தவறான வாக்குறுதி அளித்தார். ஒரு கையெழுத்து போட்டால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், இன்று 50 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறுவதாக கூறி மக்களை ஏமாற்றி திசை திருப்புகிறார். அதற்கு, அதிமுக ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்பதும், அரசியலில் அவருக்கு அனுபவம் இல்லை என்பதும் தெரிகிறது. இதனால்தான் அவர் அரசியலில் சிறுபிள்ளைத்தனமாக செயல்படுகிறார்.
தமிழகத்தில் சமூக விரோத செயல்களுக்கு அடிப்படையாக உள்ள கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளதால், குற்றச் செயல்கள் அதிகரிப்பதோடு, சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது” என்று கூறினார்.
இதையும் படிங்க: கரோனா காலத்தில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர்களுக்கு கரோனா பணிச்சான்று வழங்க உத்தரவு!