ராணிப்பேட்டை மாவட்டம் புங்கனூர் காப்புக்காடு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மானை வேட்டையாடிய இருவரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்ததோடு, விற்பனைக்காக வைத்திருந்த 3 கிலோ மான் கறியையும் பறிமுதல் செய்தனர்.
ஆற்காடு வனக்கரகர் சரவணபாபு உத்தரவின் பேரில், வனவர் ஆதிமூலம் தலைமையிலான குழுவினர் புங்கனூர் காப்புக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது வனப் பகுதியிலிருந்து 3 பேர் வனத்துறை காவலர்களை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
அதில் இருவரை மடக்கி பிடித்த வனத்துறையினர் விசாரணை செய்த போது, மூவரும் ஆற்காடு அடுத்த லாடவரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 61), விஜயன் (வயது 36) என்பதும், இவர்கள் மானை வேட்டையாடி கொன்றதும் தெரிய வந்தது. இருவரையும் உடனடியாக கைது செய்த வனத்துறையினர், அவர்களிடம் இருந்த 3 கிலோ மான் கறியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் இருவரையும் ஆற்காடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய அர்ஜூனன் (வயது 33) என்பவரை வனத்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, வனப்பகுதிகளில் அத்துமீறி நுழையும் நபா்கள் மீதும், வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சிகளை விற்பனை செய்யும் நபா்கள் மீதும் குண்டா் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.