ராணிப்பேட்டை: ஜூலை மாதம் 30 ஆம் தேதி ஆற்காட்டிலுள்ள பைனான்சியரும் தொழிலதிபருமான ஆட்டோ கண்ணன் வீட்டில் ஒரு பெண் உள்பட ஆறு பேர் கொண்ட கும்பல், வருமான வரித்துறையினர் போல் பாவனை செய்து சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது கண்ணனிடமிருந்து 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து கண்ணன், அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
விசாரணை
இந்தப் புகாரின் அடிப்படையில் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் ஆற்காடு நகர காவல்துறை ஆய்வாளர் வினாயக மூர்த்தி தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
விசாரணையில், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எழிலரசன் என்பவர் இந்தச் சோதனை நடைபெறுவதற்கு முன்பு அந்த வீட்டுப் பகுதியை நோட்டமிட்டவாறு சென்றது சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்தது.
இதையடுத்து எழிலரசனிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஆட்டோ கண்ணனின் வீட்டில் சுமார் 5 ஆண்டுகள் வாடகைக்கு இருந்ததும், ஆட்டோ கண்ணன் எழிலரசனுக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் கடனாக வழங்கி இருப்பதும் தெரியவந்தது.
தானா சேர்ந்த கூட்டம்
ஒருகட்டத்தில் ஆட்டோ கண்ணனிடம் பண நடமாட்டம் இருப்பதை நோட்டமிட்ட எழிலரசன், அவரிடமிருந்து பணம் பறிக்கும் திட்டத்தை தீட்டியுள்ளார். இதற்காக அதே பகுதியை சேர்ந்த பரத் என்பவருடன் இணைந்து, சென்னையில் உள்ள அவரது நண்பரான மது என்பவரிடம் இது குறித்து கூறியுள்ளார்.
இதையடுத்து மது ஒரு குழுவினரையும், சென்னையில் காவல்துறையில் பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் நரேன் என்பவர் ஒரு குழுவையும் ஒன்று கூட்டி மொத்தம் 8 பேர் கொண்ட ஒரே குழுவாக சேர்ந்து ஆட்டோ கண்ணனிடம் பணம் பறிக்க திட்டமிட்டுள்ளனர்.
இதில் நரேன் அமைத்த குழுவில் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் ராமகிருஷ்ணா யாதவா எனப்படும் யாதவா என்பவர் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய குற்றவாளிகளுக்கு வலை வீச்சு
இதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து காரின் எண் பலகையை மாற்றி ஆட்டோ கண்ணன் வீட்டில் வருமான வரி துறை அலுவலர்கள் போல் சோதனை மேற்கொண்டு, அவர் வீட்டில் இருந்த 6 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
இந்நிலையில் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த எழிலரசன்(39), பரத் (44), பெரம்பூர் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணா யாதவா என்அப்படும் யாதவா (58), சென்னை முகப்பேரை சேர்ந்த மது (40), ஜாமியா பகுதியை சேர்ந்த சையத் கலீல் (33), புதுப்பேட்டையை சேர்ந்த முபினா (37) ஆகிய 6 பேரையும் கைது செய்த காவல் துறையினர், முக்கிய குற்றவாளியான நரேனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் நரேன், யாதவா இருவர்களது உதவியுடன் தான் இச்செயல் நிறைவேற்றப்பட்டது எனக் கூறும் காவல்துறையினர், இவர்கள் இதுபோன்று வேறு எங்காவது மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து இவர்களிடம் இருந்த இரண்டு இருசக்கர வாகனம், கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட 6 பேரையும் ஆற்காடு நீதிமன்றம் முன் நிறுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: டூ வீலரில் சென்று கொண்டிருந்த பெண்ணின் 10 சவரன் தாலி சங்கிலி பறிப்பு!