ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் இன்று (டிசம்பர் 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய துரைமுருகன், மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை நாடே எதிர்க்கிறது ஆனால் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் அதனை வரவேற்கிறார். இதற்கு காரணம், பழனிசாமி அமித் ஷாவுக்கும் நரேந்திர மோடிக்கும் அடிமை. டெல்லிக்கு அவர் அடிமையாக உள்ளார். அதனால்தான் அவர் வேளாண் சட்டத்தை வரவேற்கிறார்.
எடப்பாடி பழனிசாமி இன்னும் நான்கு மாதங்கள் மட்டுமே சென்னை கோட்டை பக்கம் செல்ல முடியும். அதன் பிறகு யாரும் அவரை மதிக்க மாட்டார்கள். வேளாண் சட்டத்தை வரவேற்பதாக கூறும் எடப்பாடி பழனிசாமி வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது இதனை அறிவிப்பாரா என்று பார்ப்போம். இன்றே திமுக ராணிப்பேட்டையில் வெற்றி விழா கொண்டாடிவிட்டது. சட்டப்பேரவைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்றார்.