ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சோகனூரில் கடந்த ஏழாம் தேதி இரவு நடைபெற்ற இரு பிரிவினருக்கிடையேயான மோதலிலல் சோகனூரை சேர்ந்த சூர்யா, அர்ஜுன் ஆகிய இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். சாதி ரீதியில் கொலை நிகழ்த்தப்பட்டதாகவும், பெருமாள்ராஜாபேட்டை பகுதியை செர்ந்த கொலையாளிகளை கைது செய்யகோரியும் சோகனூரை சேர்ந்த பொதுமக்கள் அன்று இரவு முதலே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உறவினர்களின் தொடர் போராட்டம்:
கொலைக்கு காரணமானவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் பதிவு செய்ய வேண்டும். அப்பகுதியில் மணல் கொள்ளைகளில் ஈடுபட்டுவரும் அதிமுக ஒன்றிய செயலாளர் பழனி உட்பட 20 பேரை கைது செய்ய வேண்டும், உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும், அரசு பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து உடலை வாங்காமல் தொடர் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இளைஞர்களின் குடும்பத்துக்கு உதவி:
இந்நிலையில் கொலைவெறி தாக்குதலில் உயிரிழந்த சூர்யா, அர்ஜூன் குடும்பத்திற்கு தலா 4 லட்சத்து 12,500 ரூபாய் முதல் கட்டமாகவும். பாதிக்கப்பட்ட சூர்யா மனைவி ஷாலினி, அர்ஜுன் மனைவி லட்சுமி ஆகியோருக்கு அரசு வேலை வழங்கும்வரை 5,000 ரூபாய் மாத உதவி தொகைக்கான ஆணையையும், படுகாயமடைந்த குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் என வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண நிதிக்கான காசோலையை ராணிபேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் இளைஞர்களின் குடும்பத்தாரிடம் வழங்கினார்.
உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்:
இதனையடுத்து 4 நாள் போராட்டம் கைவிடப்பட்டு இரு இளைஞர்களின் உடல்களையும் உறவினர்கள் பெற்றுக்கொண்டு நல்லடக்கம் செய்தனர். இரட்டை கொலை தொடர்பாக பெருமாள்ராஜாபேட்டையை சேர்ந்த அதிமுக பிரமுகர் மகன் சத்யா மற்றும் மதன், அஜித், புலி (எ) சுரேந்தர், கார்த்தி, நந்தகுமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.