ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், கலவை கூட்ரோடு புதுகாலனி பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (34). இவர் வேலூரில் உள்ள தனியார் பேக்கரி ஒன்றில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம், மித்ராவயல் பகுதியைச் சேர்ந்த அமுதவள்ளி (33) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், இருவருக்கும் ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (நவ.8) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதவள்ளி தற்கொலை செய்துகொண்டு உள்ளார். இந்த தகவல் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கலவை காவல் ஆய்வாளர் காண்டீபன் தலைமையிலான போலீசார் உயிரிழந்த அமுதவள்ளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரகாஷ் மற்றும் அவரது தாயாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகிய நிலையில் அமுதவள்ளி உயிரிழந்தது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், தற்கொலைக்கான காரணம் என்ன என்று பல கோணங்களில் விசாரணை நடத்தினர். பின் வீட்டை சோதனை செய்தபோது அமுதவள்ளி எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. "அதில் செல்ல மகளே அம்மா உன்னை விட்டு பிரிந்து போகிறேன். நீ புத்தியுள்ள மகளாக வாழவேண்டும். என் தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை" என கடிதம் எழுதி வைத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க கோரிக்கை!