ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் இருந்து அம்மூர் செல்லும் சாலையில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ஜேசிபி இயந்திரத்தின் உதவியோடு பள்ளம் தோண்டும் பணி நடைபெறு வருகிறது. அப்போது, பூமியில் புதைக்கப்பட்டிருந்த இயற்கை எரிவாயு விநியோகம் செய்யும் பைப் லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டு அதிக சத்தத்துடன் கேஸ் கசியத் தொடங்கியது.
இந்த பைப் லைன் மூலமாக செட்டித்தாங்கல் மற்றும் வானாபாடி ஆகிய பகுதிகளில் உள்ள வினியோக நிலையங்களுக்கு இயற்கை எரிவாயு செல்லும் நிலையில், இந்த உடைப்பைக் கண்டறிந்த தனியார் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் ஊழியர்கள், உடனடியாக கேஸ் விநியோகத்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
தொடர்ந்து, உடைப்பைச் சரி செய்யும் பணியில் தனியார் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டு உடைப்பைச் சரிசெய்தனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராணிப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் 10 பேர் கொண்ட குழுவினர், அந்தப் பகுதியில் தீ விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ராணிப்பேட்டை மாவட்டம் மாந்தாங்கல் பகுதியில் சாலை விரிவாக்க பணிக்குப் பள்ளம் தோண்டும் போது எதிர்பாராமல் தனியார் இயற்கை எரிவாயு விநியோக நிலையத்தின் எரிவாயு பைப்லைனில், ஜேசிபி இயந்திரம் மூலம் உடைப்பு ஏற்பட்டு கேஸ் கசிவு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: சென்னை சி.பி.சி.எல் (CPCL) நிறுவனத்தில் திடீர் தீ விபத்து..மீட்புப் பணிகள் தீவிரம்..!