கடலூர்: திட்டக்குடி அடுத்த ஆவட்டி கிராமத்தில் உள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி நோக்கிச் சென்ற அரசு பேருந்து முன்னே சென்ற காரின் மீது அதிவேகமாக மோதியதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதியது. இதில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதில் காரில் பயணம் செய்த மண்ணார்குடியை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த பெண் குழந்தை மற்றும் முதியோரை மீட்ட போலீசார் பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சிகிச்சைப் பலனின்றி பெண் குழந்தையும் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
இதனிடையே, படுகாயமடைந்த முதியவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் விபத்தில் பலியானவர்கள் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான மதிவாணன்(35), கௌசல்யா(32), துரை(60), தவமணி(55) ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது.
இப்பகுதியில் இவ்வாறு அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், கடந்த ஜனவரி மாதம் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் நெடுஞ்சாலைத்துறை போதிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: திமுக எதை எழுதிக்கொடுத்து பாஜகவுடன் கூட்டணி வைத்தது? - ஈரோட்டில் எடப்பாடி விளாசல்!