ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த சோகனூரில் மாற்று சமுதாயங்களைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் அக்கிராமத்தைச் சேர்ந்த அர்சுனன் (26), அதே ஊரைச் சேர்ந்த சூர்யா (26) ஆகிய இருவரும் கத்தி, கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களால் பலமாகத் தாக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
மேலும் மதன், வள்ளரசு, சௌந்தர்ராஜ் ஆகியோர் படுகாயங்களுடன் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இக்கொலையை அடுத்து அப்பகுதியில் ஏற்பட்ட பதட்டம் காரணமாக பாதுகாப்பிற்காக 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, பெருமாள்ராஜப்பேட்டையைச் சேர்ந்த மதன் (37), அஜித் (24) ஆகிய இருவரையும் முன்னதாகக் கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடையவர்களை தனிப்படை அமைத்தும் தேடி வந்தனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (ஏப்ரல். 15) வேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எண் 5ல் நீதித்துறை நடுவர் பிரவின் ஜீவா முன்பு ராணிப்பேட்டையைச் சேர்ந்த சிவா (32), விக்னேஷ் (23) ஆகிய இருவர் சரணடைந்தனர்.
இவர்கள் இருவரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்படவும், ஏப்ரல் 19ஆம் அன்று வேலூர் மாவட்ட பின்தங்கிய வகுப்பினருக்கான நீதிமன்றத்தில் (SC/ST Court) ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரக்கோணம் கொலை வழக்கு: இருவர் கைது, மூன்று தனிப்படைகள் அமைப்பு !