ராமநாதபுரம்: முதுகுளத்தூர் சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக சார்பில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி போட்டியிடுகிறார். இவர் கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பாண்டியிடம் தோல்வியை தழுவினார். தற்போது 2021 தேர்தலில் மீண்டும் முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.
ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் சீர்மரபினர் வசிக்கும் பெரும்பாலான கிராமங்களில் அதிமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகள், தெருக்கள், ஊர் எல்லையில் கறுப்புக் கொடி கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில முதுகுளத்தூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி வெள்ளிக்கிழமை ஆனையூர் கிராமத்தில் தனது குலதெய்வமான அங்காளபரமேஸ்வரி கோயிலில் சிறப்பு பூஜை செய்து, முதல் நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், மருதுபாண்டியர்கள், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் சிங்கப்புலியாபட்டி கிராமத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது ஊரின் நுழைவு வாயிலில் கறுப்புக்கொடி கட்டி அதிமுகவைச் சேர்ந்த வேட்பாளர் மற்றும் கட்சிக்காரர்கள் ஊருக்குள் நுழைய கூடாது என்று இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து காவலர்கள் துறையினர் கருப்புக் கொடியை அகற்றி இளைஞர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அதிமுக வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து, எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள் மற்றும் கிராமத்தினர் இடையே சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும் நான் வெற்றி பெற்றால் இக்கிராமத்திற்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பேன். உங்களின் குரலாக சட்டப்பேரவைரில் குரல் கொடுப்பேன் என இளைஞர்களிடம் உறுதியளித்து அங்கிருந்து புறப்பட்டார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கமுதி காவல் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 695 பேருக்கு கரோனா!