வங்கக்கடலில் உருவாகியுள்ள யாஸ் புயல் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
நோற்றைய தினம் (மே.23) போர்ட் பிளேருக்கு வடமேற்கில் 560 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள யாஸ் புயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து, மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்பகுதியை வரும் மே 26ஆம் தேதி காலை சென்றடையும்.
இது வடக்கு ஒடிசா-மேற்கு வங்கத்தை கடந்து, பாரதீப் மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே, மே 26ஆம் தேதி மாலை அதி தீவிரப் புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்
யாஸ் புயல் காரணமாக வங்கக் கடலில் காற்று வழக்கத்திற்கு மாறாக மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக் கூடும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.