ராமநாதபுரம்: கமுதி அருகே உள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முத்துலட்சுமி (35), கற்பகவள்ளி (32), அருணாச்சலம் (42). இவர்கள் மூவரும் நேற்று (செப்.19) தங்கள் கிராமத்தில் உள்ள வேளாண் நிலத்தில் பருத்தி பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் கோவிலாங்குளம், நெறிஞ்சிப்பட்டி, தோப்படைப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
அப்போது வேளாண் பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்கள் மீதும் மின்னல் தாக்கியது. இதில் படுகாயமடைந்த மூவரும், உடனடியாக கமுதி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டனர்.
ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்
அவர்களைப் பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே கற்பகவள்ளி உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் படுகாயமடைந்த இரு பெண்களும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
இது குறித்து கோவிலாங்குளம் கிராம நிர்வாக அலுவலர் சரவணக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று விசாரனை நடத்தி, உயர் அலுவலர்களுக்குத் தகவல் அளித்தனர். தற்போது கோவிலாங்குளம் காவல் துறையினர், மின்னல் தாக்கி பெண் உயிரிழந்தது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சா: இருவர் கைது