ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி (தனி) தொகுதி முதல்முறையாக இடைத்தேர்தலை சந்திக்க இருக்கிறது. பரமக்குடி தொகுதி 1967யில் தனித் தொகுதியாக உருவாக்கப்பட்டது. விவசாயம், நெசவு ஆகியவை பிரதான தொழிலாக உள்ளது. இங்கு நெல், பருத்தி, குண்டு மிளகாய், மல்லி விளைவிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதுவரை 12 தேர்தலை பரமக்குடி சட்டமன்ற தொகுதி சந்தித்து உள்ளது. இதில் 3 முறை திமுகவும், 7 முறை அதிமுகவும், 1 முறை தாமாகவும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் முத்தையா 79,254 வாக்குகள் பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் திசை வீரன் 67,865 பெற்றார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தையா தினகரனுக்கு ஆதரவு அளித்ததால், கட்சி தாவல் சட்டத்தின் கீழ் அவரின் பதவி இரண்டாண்டுக்கு முன்னர் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பரமக்குடி மக்களை பொறுத்தவரை கடந்த 2 ஆண்டாக சட்டமன்ற உறுப்பினர் இல்லாததால் நெசவாளர் பிரச்னை, பாதாள சாக்கடை, வைகையில் கலக்கும் கழிவுநீர், மணல் கொள்ளை, முழுமை பெறாத இணைப்பு சாலைகள், அரசு பள்ளி, தண்ணீர் வசதி என எண்ணற்ற பிரச்னைகளை மக்கள் சந்தித்து வருகின்றது. இவைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தற்போதுவரை தத்தளித்து வருகின்றனர்.
யார் வெற்றி பெற்றாலும் எங்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என பரமகுடி பொதுமக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.