பாம்பன்-கன்னியாகுமரிக்கு இடையே புரெவி புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று (டிச. 04) மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வாக மாறியது. இதன் காரணமாக பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதற்கிடையில் தற்போது காற்றழுத்த தாழ்வுப் பகுதி ராமநாதபுரம் அருகே நிலைகொண்டுள்ளது.
இது மேலும் நகர்ந்து தூத்துக்குடி-ராமநாதபுரத்திற்கு இடையே, வலுவிழந்து கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக பாம்பன் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த ஏழாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு தற்போது மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வரும் 24 மணி நேரத்தில் தென் தமிழ்நாட்டில் அநேக இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையொட்டி மக்கள் ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மதுராந்தக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!