இந்தியா - சீன எல்லைப் பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள கடுக்கலூர்கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி வீரமரணம் அடைந்தார்.
இவரின் உடல் சொந்த ஊரான கடுக்கலூருக்கு இன்று (ஜூன் 17) மாலை 5 மணிக்கு மதுரைக்கு இராணுவ சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து 7 மணி அளவில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட உள்ளது.
ராணுவ வீரர் பழனி குறித்து அவரது சகோதரர் இதயக்கனி, “ நானும் அண்ணன் உந்து சக்தியால் ராணுவத்தில் சேர்ந்தேன். 11 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டிற்கு வந்தேன். ஆனால் கரோனாவால் திரும்பிச் செல்ல முடியவில்லை. சமீபத்தில் அண்ணனின் வீட்டிற்கு பால் காய்ச்சுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த எட்டு நாட்களுக்கு முன்புராணுவ பணிக்கு சென்றிருந்த நிலையில், அங்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தேன். அப்போது அண்ணன் இறந்த செய்தி கிடைத்தது. கடந்த ஒன்றரை வருடங்களாக எல்லைப்பகுதியில் அண்ணன் பணிபுரிந்துவருகிறார். அடிக்கடி தொலைபேசியில் பேசிய நிலையில் இந்த செய்தி என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த செய்தி அறிந்ததுமே டெல்லியில் இருந்து விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பினேன். அண்ணனின் இழப்பு மிக பெரிய அளவில் குடும்பத்தினரை பாதித்துள்ளது. நாட்டிற்காக உயிரிழந்த அண்ணனுக்கு சிலை வைக்க கிராம மக்கள் சார்பிலும், எங்கள் குடும்பம் சார்பிலும் கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.
உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் உடல் இன்று இரவு வர தாமதம் ஏற்படும் பட்சத்தில் நாளை காலை இறுதிச்சடங்கை செய்வதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனுடன் அரசு அறிவித்த 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று வழங்குவதாக கூறியுள்ளார். குறிப்பாக, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்திருப்பதாகவும் ஆட்சியர் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'அப்பா மாறி நானும் மிலிட்ரி ஆபிசர் ஆக போறேன்' - உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் மகன்