தொழில்நுட்பம் வளர வளர மக்களின் வாழ்க்கைமுறை எளிதாகவும் அதே சமயம் சிக்கலானதாகவும் மாறத் தொடங்கியுள்ளது. முன்னர் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்ல 'நட’ராஜா... சர்வீஸ் தான். கொஞ்சம் வசதியிருப்போர் மாட்டு வண்டி (அ) குதிரை வண்டி என பயணத்தை மேற்கொள்வர். இதனால் போக்குவரத்திற்கு காலதாமதமானது. அதுபோலவே, இரு ஊருக்கான தகவல் பரிமாற்றமும் தாமதமானது. ஆனால் இன்றோ... இரண்டுக்குமே தாமதப்படவேண்டியதில்லை. அனைத்தும் துரிதமாகிவிட்டது.
சொந்த வாகனங்கள், வாடகை வாகனங்கள், பொதுப்போக்குவரத்து என வசதிக்கு ஏற்றார்போல மக்கள் பயணப்படுகின்றனர். பயணங்கள் தகவல்களை மட்டுமல்ல, வைரஸ்களையும் கூடத்தான் கடத்துகின்றன என்பதை கரோனா காலம் நமக்கு உணர்த்தி வருகிறது. ஆகவே, கடந்த சில மாதங்களாக, தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்து முடங்கியிருந்தது.
தற்போது ஆறு மாதங்களுக்குப்பிறகு, கடந்த செப்டம்பரில் இருந்து தமிழ்நாடு அரசு பேருந்து சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தும்கூட, அனைத்துப் பகுதிகளிலும் அனைத்துப் பேருந்துகளும் இயக்கப்படுவதில்லை. இதனால் பேருந்துகளை நம்பி வேலைக்குச் செல்வோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். வாங்கும் சொற்ப கூலிக்கு தனி வாகனத்தை ஏற்பாடு செய்து பயணிப்பது உழைக்கும் வர்க்கத்தினருக்கு கடினம்தான்.
ராமநாதபுரத்தில் மொத்தமாக 324 நகரப் பேருந்துகள் உள்ளன. இதில் வெளியூர்களுக்குச் சென்று வரும் பேருந்துகளும், நகரப் பேருந்துகளும் அடக்கம். தவிர, 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்ற பணிமனைகளில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வளவு பேருந்துகள் இயக்கிய பின்னரும்கூட, மக்கள் நீண்ட நேரம் பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தக் காத்திருப்பு நேரம் வேலைக்குச் செல்வோருக்கு தாமதத்தை ஏற்படுத்துகிறது.
70 விழுக்காடு பேருந்துகளை இயக்கியும் மக்களுக்கு போதாமை ஏற்படுவதன் பின்னணி என்ன என்பது குறித்து போக்குவரத்து துறை அலுவலரிடம் கேட்டபோது, 'அரசு கூறியுள்ள அறிவுறுத்தலைப் பின்பற்றி 60 முதல் 70 விழுக்காடு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 70-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் ராமநாதபுரம் பகுதியிலிருந்து கமுதி, பரமக்குடி, மதுரை, முதுகுளத்தூர், திருவாடனை, காரைக்குடி போன்ற பகுதிகளில் இயங்குகின்றன. தகுந்த இடைவெளி போன்ற காரணங்களால் மக்களுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கலாம். தீபாவளி நெருங்கும் காலத்தில் மக்களின் கூட்டத்தைப் பொறுத்து பேருந்துகளின் எண்ணிக்கை 100 விழுக்காடாக அதிகரிக்கப்படும்' என்றார்.
கரோனா பரவல் காரணமாக பொது ஊரடங்குத் தளர்வுகளின்றி அமல்படுத்தப்பட்ட காலத்தில் கூட ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்துப் பணியாளர்களுக்கும் சம்பளம் முறையாக வழங்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் பணத்தில் மட்டுமே சிறிய சுணக்கம் இருந்ததாகவும் மற்றபடி அனைவருக்கும் ஊதியம் வழங்கப்பட்டதாகவும் போக்குவரத்து துறை அலுவலர் தெரிவித்தார்.
அரசு போக்குவரத்து பணியாளர்களைப் போலவே தங்களுக்கும் முறையாக ஊதியம் வழங்கப்பட்டதாகத் தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் தெரிவிக்கிறார். கடந்த ஆறு மாதங்களாக பொதுப்போக்குவரத்து இல்லாததால் மக்கள் சொந்த வாகனங்களைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்தப் பயன்பாடு மீண்டும் மக்களை பொதுப்போக்குவரத்திற்கு அழைத்து வருவதில் சிக்கலை உண்டாக்கும்.
தவிர, போக்குவரத்து நெருக்கடி, சுற்றுச்சூழல் மாசுபாடு போன்ற புறக்காரணிகள் பாதிப்பும் ஏற்படும் என சமூக ஆர்வலர் சிவாஜி சுட்டிக் காட்டுகிறார்.
'கரோனா அச்சம் காரணமாக சிலர் பொதுப்போக்குவரத்தைத் தவிர்ப்பது நிகழத்தான் செய்கிறது. அதேசமயம் பொதுப்போக்குவரத்தைத்தான் பெரும்பாலான கிராமத்தினர் நம்பியுள்ளோம்' என்கிறார் சந்திரன்.
கிராமங்களின் நிலை:
நகர்ப்புறங்களில்கூட ஷேர் ஆட்டோ, கேப் போன்றவற்றின் மூலம் பயணித்துவிடலாம். ஆனால், கிராமங்களில் வசிப்போர் பெரும்பாலும் பேருந்துகளைத்தான் நம்பியுள்ளனர். இந்நிலையில் 5 பேருந்துகள் இயங்கிய இடத்தில் 1 பேருந்து மட்டும் இயக்கப்படுவது மிகவும் சிக்கலான சூழலையே உருவாக்குகிறது. கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
'பண்டிகை காலம் வருவதால் அரசு அதனைக் கவனத்தில் கொண்டு பேருந்து சேவையை அதிகரிக்க வேண்டும். மக்கள் மீண்டும் பொதுப்போக்குவரத்தை அணுகும் அளவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே போக்குவரத்துத் துறைக்கு மீண்டும் அதே அளவு வருவாய் கிடைக்கும்' என்கிறார் சமூக ஆர்வலர் சிவாஜி.
கிராமங்களின் நிலையை பட்டவர்த்தனமாகத் தெரிந்து கொள்ள சந்திரனிடம் கேட்டபோது, 'முன்பு போல பேருந்துகள் இயங்காததால் தற்போது வேறுவாகனங்களை நாட வேண்டியுள்ளது. இதனால், குறைந்த தூரம் செல்ல அதிகப் பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது. அரசு கிராமப்புறங்களையும் சற்று உற்றுநோக்க வேண்டும்' என்றார்.
பயணத்தை இலகுவாக்குவதோடு பொருளாதார நிலையில் பின் தங்கியவர்களையும், அரவணைத்து வரும் ஆற்றல், அரசு பேருந்துகளிடம் தான் உள்ளது. அரசுப் பேருந்துகளை முழுமையாக இயக்கினால் மட்டுமே, இந்நிலைமை மாறும். முழுமையான பேருந்து இயக்கம் தான் மக்களின் கோரிக்கையும் கூட.
இதையும் படிங்க:ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்துகள் இயக்கம் - பயணிகள் மகிழ்ச்சி!