ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 பேர், புதுக்கோட்டையை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 26 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் காரைநகர் கடற்படை தளத்தில் கடற்படையினர் தனிமைப்படுத்தினர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் இன்று(ஜன.13) ஊர்காவல் நீதிமன்ற நீதிபதி யூட்சன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது விசாரணை நடத்திய நீதிபதி, இனிமேல் இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடிக்க கூடாது என்ற எச்சரிக்கையோடு விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும், எச்சரிக்கையை மீறி இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வரும் மீனவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், மீன் பிடிக்க பயன்படுத்தப்பட்ட நான்கு விசை படகுகளையும், உபகரணங்களையும் அரசுடைமையாக்கியும் தீர்ப்பு வழங்கினார்.
விடுதலை செய்யப்பட்ட 26 மீனவர்கள் இரண்டு அல்லது மூன்று தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.