சென்னையைச் சேர்ந்த நீதிமணி, மேனகா ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஆனந்த் ஆகியோர் நடத்திய நிதி நிறுவனத்தில் அதிக வட்டி கிடைக்குமென ராமநாதபுரம் மாவட்டம் மூலக்கொத்தளம் பகுதியைச் சேர்ந்த துளசி மணிகண்டன்,ரூபாய் ஐந்து லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார்.
மேலும், தனது உறவினர்கள், நண்பர்கள் என மொத்தமாக 58 பேரிடமிருந்து ஜூலை 2018 ஆம் ஆண்டு ரூபாய் மூன்று கோடி வரை கொடுத்துள்ளார். அவர்களிடமிருந்து ஒரு சில மாதங்கள் மட்டுமே அதிக லாப வட்டி கிடைத்தது. அதன் பிறகு அவர்கள் பணத்தைக் கொடுக்கவில்லை.
இதனையடுத்து, பஜார் காவல் நிலையத்தில் துளிசி மணிகண்டன் அளித்த புகாரின் அடிப்படையில் நீதிமணி மற்றும் ஆனந்த் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டனர். அவரிடமிருந்து நகை, பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்தது.
இதனிடையே காரைக்குடி பகுதியைச் சேர்ந்த கற்பகவல்லி என்ற பெண்ணும் நீதிமணி ஆனந்த் உள்ளிட்டவர்களிடம் ரூபாய் 40 லட்சம் வரை பணத்தைக் கொடுத்து ஏமாற்றபட்டுள்ளார் என்பதும், மேலும் இந்த வழக்கில் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஏமாற்றப்பட்டிருப்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதனால் இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர் கோரியிருந்தார். அதனடிப்படையில் தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரிபாதி இருவழக்குகளையும் பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.