ராமநாதபுரம்: பாம்பன் ரயில் பாலத்தில் நேற்று (ஜூன் 29) சென்சாரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனை ஐஐடி குழுவினர் நேற்று இரவு சரிசெய்தனர். பின் ரயில் இன்ஜின் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடந்த பிறகு, ரயில்களை இயங்க முடிவு எடுக்கப்பட்டது.
மீண்டும் கோளாறு
இந்நிலையில் இன்று (ஜூன் 30) காலை, மீண்டும் சென்சாரின் கணக்கீட்டில் மாறுபாடு இருந்ததன் காரணமாக ரயில் சேவை ரத்துசெய்யப்படுவதாக பராமரிப்புப் பொறியாளர் தகவல் அளித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான தகவல் ஐஐடி குழுவினருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்து ஆய்வுசெய்து சரிசெய்த பிறகே மீண்டும் ரயில் சேவை தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் புறப்படும் பாம்பன் பாலத்தில் தற்போது மீண்டும் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் தற்காலிகமாக மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து ரயில் சேவை செயல்படும் எனத் தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் அறிவித்துள்ளது.
ரயில் நேரங்களில் மாற்றம்
இது குறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இன்று (ஜூன் 30) மாலை 05.10 மணிக்கு ராமேஸ்வரத்திலிருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 06852 ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் ராமேஸ்வரம் - மண்டபம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்துசெய்யப்பட்டு, மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 05.40 மணிக்குப் புறப்படும்.
இன்று நண்பகல் 12.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேர வேண்டிய வண்டி எண் 06849 திருச்சி - ராமேஸ்வரம் சிறப்பு ரயில் மண்டபம் ரயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06850 ராமேஸ்வரம் - திருச்சி சிறப்பு ரயில் மண்டபம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 03.05 மணிக்குப் புறப்படும். மண்டபம், ராமேஸ்வரம் ரயில் நிலையங்களில் பயணிகளுக்குச் சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ’பட்ஜெட் கூட்டத்தொடரில் அண்ணா பெயரில் திட்டங்கள்’ - முதலமைச்சர் ஸ்டாலின்