ராமநாதபுரம் மாவட்டம் ஊப்பூர் அருகே செயல்பட்டு வரும் 1600 மெகா வாட் திறன் கொண்ட ஊப்பூர் அனல் மின் நிலையத்துக்கு கடல் நீரை எடுத்துச்செல்ல கடலினுள் 7.6 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் இது பற்றி மீனவ கிராம மக்களுக்கு எந்த அறிவிப்பும் தெரியப்படுத்தவில்லை. இதனால் கடலை நம்பி தொழில் செய்யும் 20 கிராம மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கடந்த 15ஆம் தேதி ஊப்பூர் அரசுப் பள்ளியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், கருப்புப் பட்டை அணிந்து தீர்மானம் நிறைவேற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அலுவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் கிராம மக்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்படும் என கூறியிருந்தார். இதை அடுத்து தீர்மானம் நிறைவேற்றப்படாமலேயே கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் ஊப்பூர் அனல்மின் நிலைய அலுவலர்கள், அரசு அலுவலர்கள் அடங்கிய கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. அதில் வரும் 22ஆம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும் என்றும், அதுவரை கடலில் பாலம் அமைக்கும் பணிகள் நடைபெறாது என்றும் ஆட்சியர் வீர ராகவ ராவ் கிராம மக்களிடம் உறுதி அளித்தார்.