ராமநாதபுரம் மாவட்டம் சந்தை திடல் பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடி எம்.பி. கனிமொழி பங்கேற்றார்.
இவ்விழாவில் பேசிய கனிமொழி, ”குடியுரிமை திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக மக்களவையில் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் மத்திய அரசுக்கு ஏன் வந்துள்ளது.
பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பாகிஸ்தானையும், முன்னாள் பிரதமர் நேருவையும் குற்றஞ்சாட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். குடியரசுத் தலைவர் உரையில் விவாதத்தின்போது 23 முறை நேருவின் பெயரை உச்சரித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை நடத்திவருகின்றனர். டெல்லியில் 55 நாட்களுக்கு மேலாக பெண்கள் போராடி வருகின்றனர். மேலும் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா பல்கலைகழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கல்லூரியில் புகுந்து நூலகங்களை பாஜகவினர் சேதப்படுத்தினர்.
குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டுமல்ல. இது அனைவருக்கும் எதிரானது. அனைவரும் ஒன்றிணைந்து குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறும் வரை போராட வேண்டும் என்றும், இது இரண்டாவது சுதந்திரப் போராட்டம் போன்றது என்றார்.
இதையும் படிங்க: மத்திய பட்ஜெட்டை எதிர்த்து போராட்டம்- முத்தரசன்