ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி, திருப்புல்லாணி, பரமக்குடி, நயினார் கோவில், திருவாடானை ஆகிய பகுதிகளில் பெண்கள் வேலைக்குச் சென்று தனியாகத் திரும்பும்போது அவர்களைக் குறிவைத்து கழுத்தில் அணிந்திருந்த செயின், தோடு ஆகியவற்றை வழிப்பறிச் செய்வதும், இரவு நேரங்களில் வீடுகளின் ஓடு, வீட்டின் பின்புறம் உள்ள கதவுகளை உடைத்து வீட்டில் உள்ள பொருள்களைத் திருடும் திருடர்களைப் பற்றியும் காவல் துறையினருக்குப் பொதுமக்கள் புகார் அளித்து வந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் தொடர் வழிப்பறி, திருட்டு கும்பலைப் பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்து, அதன்மூலம் திருடர்களைப் பிடிக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்பேரில் ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை, முக்கியப் பகுதிகளைச் சேர்ந்த அறிவழகன், ரஞ்சித், மகேந்திரன், லோகநாதன் உள்பட எட்டு பேரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரித்தபோது, வீட்டில் இருந்து வேலைக்குச் செல்ல தனியாக வரும் பெண்களிடம் செயின், நகைகளைப் பறிப்பதும், வீடுகளில் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.
மேலும், பரமக்குடி பகுதியில் பட்டு சேலைக்குத் தயார்செய்யப்படும் பட்டு நூல்களைத் திருடிய இரண்டு நபர்களையும் பிடித்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 52 பவுன் நகை, ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள பட்டு நூல்களையும் பறிமுதல்செய்தனர். இவர்களைப் பிடித்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பாராட்டினார்.