ராமநாதபுரம்: நீட் தேர்வு எழுதச்சென்று உயிரிழந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு தக்க இழப்பீடு வழங்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பாப்பனம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா என்ற மாற்றுத் திறனாளி மாணவி 2019ஆம் ஆண்டு, மதுரையில் நீட் தேர்வெழுதச் சென்று, பேருந்தில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்தார்.
உடனடியாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது.
நீட் தேர்வினால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே மாணவி உயிரிழந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இறந்த மாணவியின் தந்தையும் மாற்றுத் திறனாளி என்பதால், குடும்பத்திற்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதற்கு எந்தவித பதிலும் மாவட்ட ஆட்சியரிடத்தில் இருந்து வரவில்லை என்று கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து இன்று (அக். 5) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதில் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். அரசு உடனடியாக நீட் தேர்வு எழுத சென்ற உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். மேலும், குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.