கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு திருவிழா நாளையும், நாளை மறுநாளும் (மார்ச் 6,7 ) நடைபெறவுள்ளது. நாளை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து படகுகள் புறப்படும். திருவிழாவைக் கொண்டாட தமிழ்நாட்டு மக்கள் படகுகளில் கச்சத்தீவுக்குச் செல்வர்.
மாலை 6 மணிக்கு கச்சத்தீவு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி திருச்சிலுவை ஆராதனை, சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதைத் தொடர்ந்து திருப்பலி, தேர்ப்பவனி நடைபெறும். மார்ச் 7ஆம் தேதி காலை வழிபாடு, திருவிழா திருப்பலியுடன் விழா நிறைவுபெறுகிறது. இரண்டு நாள் விழாவில் இரு நாட்டு (தமிழ்நாடு, இலங்கை) பக்தர்களும் கலந்துகொள்வார்கள்.
இதில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலிருந்து 74 விசைப்படகுகளில் 1,989 ஆண்கள், 466 பெண்கள், 41 ஆண் குழந்தைகள், 36 பெண் குழந்தைகள், 24 நாட்டுப்படகுகளில் 315 ஆண்கள், 34 பெண்கள், 10 ஆண் குழந்தைகள், 12 பெண் குழந்தைகள் என 2 ஆயிரத்து 903 பேர் செல்லவுள்ளனர்.
இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து நாளை புறப்படுகின்றனர். பாதுகாப்பு அலுவலர்களின் சோதனைக்குப் பின் பக்தர்கள் கச்சத்தீவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். சர்வதேச கடல் எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்திய கடலோரக் காவல் படை, இலங்கை கடற்படையினர் செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பல்வேறு துறை அலுவலர்கள் ஈடுபட்டனர். அதன்பின் ராமநாதபுரம் மாவட்ட டிஜஜி ரூபேஸ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் ஆகியோர் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.
ஆய்வுசெய்த பின் பேசிய டிஜஜி ரூபேஸ்குமார், “ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 1,000 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பக்தர்கள் தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டு செல்லக் கூடாது. முழுமையான பரிசோதனைக்குப் பின்னரே பக்தர்கள் படகில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'இந்து முஸ்லீம் ஒற்றுமை' - மசூதி வாசல் முன் குண்டம் இறங்கும் நிகழ்வு