ராமநாதபுரம்: அரண்மனை முன்பு ராமநாதபுரம் மாவட்டத்தில் நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் திமுக, அதன் கூட்டணிக் கட்சி காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:
'விலைவாசி விண்ணை முட்டிக்கொண்டு உள்ளது. இதற்கு காரணம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு. அதைக் குறைக்க மத்தியில் உள்ள மோடி அரசும், மாநிலத்தில் உள்ள பழனிசாமி அரசும் நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை. காய்கறி விலை உயர்வு, மளிகை விலை உயர்வு போன்றவை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. என்னிடம் ஒரு விலைப் பட்டியலில் உள்ளது. இது நேற்றைய விலைப் பட்டியல், இவை நேற்றிரவே மாறி இருக்கலாம். அப்படி தவறாகக் கூறினால் என்னை நீங்கள் திருத்துங்கள்” என்று கூறினார்.
தொடர்ந்து, ”திமுக ஆட்சியில் உளுத்தம்பருப்பு 60 ரூபாய், இப்போது 120 ரூபாய்.
துவரம்பருப்பு திமுக ஆட்சியில் 38 ரூபாய், இப்போது 140 ரூபாய் அல்லது 150 ரூபாய்.
கடலைப் பருப்பு திமுக ஆட்சியில் 34 ரூபாய், இப்போது 75 ரூபாய்.
பாமாயில் திமுக ஆட்சியில் 48 ரூபாய், இப்போது 120 ரூபாய்.
சர்க்கரை திமுக ஆட்சியில் 18 ரூபாய், இப்போது 40 ரூபாய்.
ஒரு சிலிண்டர் திமுக ஆட்சியில் 400 ரூபாய், இப்போது 1,000 ரூபாய்.
பால் விலை திமுக ஆட்சியில் 35 ரூபாய், இப்போ 60 ரூபாய்.
மிளகாய் திமுக ஆட்சியில் 70 ரூபாய் தற்போது 250 ரூபாய்.
இவைபற்றி எல்லாம் தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள் கவலைப்படவில்லை” என்று குற்றம் சாட்டினார். அத்தியாவசியப் பொருள்களின் விலை குறித்து தொண்டர்களுடன் கலந்துரையாடி வாக்குச் சேகரித்த நிகழ்வு அங்கிருந்தோரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: நான் பாஜகவின் பி-டீமா: சீறும் கமல்!