ராமநாதபுரம் மாவட்ட முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் கோடை விடுமுறை முடிந்து நேற்று மாணவர்கள் பள்ளிக்குத் திரும்பினர். ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட வள்ளல் பாரி பள்ளியில் புதிதாக எல்.கே.ஜி., யு.கே.ஜி., முதலாம் வகுப்பு சேர்வதற்காக வந்த மாணவர்களுக்கு அந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிறப்பான முறையில் வரவேற்பை அளித்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவர்களை தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம், கட்டைகால் மூலமாகவும், கிரீடம், மாலைகள் அணிவித்தும் பள்ளியின் வாசலில் கும்ப மரியாதை செய்து, சந்தனம் குங்குமம் இட்டு பள்ளிக்கு அழைத்துச் சென்றனர்.
பள்ளி வளாகத்தில் அனைத்து மாணவர்களும் தமிழ் மொழியின் முதல் எழுத்தும் 'அ' என்ற எழுத்தை நெல்மணிகளில் எழுதி கல்வி பயிலத் தொடங்கினர். பின்னர் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மகிழ்ச்சியுடன் மாணவர்களை வரவேற்றுப் பேசினார்.