சர்வதேச பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வானது, பேடு, சில்ரன் பிளீவ் மற்றும் ப்ரீடம் பண்ட் ஆகிய நிறுவனங்கள் மூலம் இராமேஸ்வரம் அருகே சின்ன ஏர்வாடி கிராமத்தில் நேற்று (அக்.12) மாலை நடைபெற்றது.
இதில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் சமத்துவம், பெண் குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
அப்போது, நிகழ்ச்சியின் நோக்கம், உலக பெண் குழந்தைகள் தின வரலாறு குறித்து பேடு நிறுவன திட்ட இயக்குனர் மன்னன் மன்னர் எடுத்துரைத்தார்
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் குறித்து சின்ன ஏர்வாடி தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராஜலக்ஷ்மி உரையாற்றினார். பெண்களின் பொருளாதார மேம்பாடு குறித்து மீனவர் சங்க தலைவர் முத்துராணி மற்றும் கிராமத் தலைவர் செல்லம்மாள் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
மேலும், சின்ன ஏர்வாடி கிராமத்தை சேர்ந்த எட்டாம் வகுப்பு அரசு பள்ளி மாணவர் முகேஷ் என்பவர், இந்நிகழ்ச்சியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஏர்வாடி கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கையில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த வாசகங்கள் கொண்ட கயிறு கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்வதேச பெண் குழந்தைகள் தினம்: இளவரசர் ஹாரியுடன் கலந்துரையாடிய மலாலா!