தமிழ்நாடு அரசு நாளைமுதல் (ஏப்ரல் 10) ஏப்ரல் 30ஆம் தேதி வரை கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சமயம் சார்ந்த வழிபாடு, கூட்டங்களுக்குத் தடை, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணம்செய்வதைத் தவிர்த்தல், திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளுயுடன் செயல்படுதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், இன்று (ஏப்ரல் 9) தனுஷின் 'கர்ணன்' திரைப்படம் ராமநாதபுரம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைக் காண வந்த ரசிகர்களில் பெரும்பாலானோர் முகக்கவசம் அணியவில்லை.
இவர்களை திரையரங்கு உரிமையாளர்கள் முகக்கவசம் அணிய சொல்லி கட்டாயப்படுத்தவில்லை. திரையரங்குகளில் முதல் நாள் சிறப்பு காட்சி காண 400-க்கும் மேற்பட்டோர் கூடியதால் கரோனா தொற்று எளிதில் பரவும் எனச் சுகாதாரத் துறையினர் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ரசிகர்கள் ராமநாதபுரத்திற்கு வந்து படம் பார்த்துச் செல்வதால் கரோனா தொற்றின் மையமாக ராமநாதபுரம் மாறிவிடக் கூடாது எனச் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.