கேரள மாநிலம், கோழிக்கோடு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஒரு மீன்பிடி படகில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு மீனவர்களும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் என, 14 பேர் மீன்பிடிக்கச் சென்று மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, சிங்கப்பூர் சரக்கு கப்பல் மோதி விபத்து ஏற்படுத்தியதில் 7 மீனவர்கள் உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டனர். இரண்டு மீனவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். இன்னும் ஐந்து மீனவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை.
இரண்டு வார காலத்திற்கு மேலாகியும், அவர்களை உயிருடனோ, சடலமாகவோ மீட்க முடியவில்லை. மீட்கப்படாமல் உள்ள மீனவர்களில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன், வேதமாணிக்கம் என்ற இரண்டு மீனவர்கள் உள்ளனர்.
அவர்கள் உயிருடன் உள்ளனரா? இல்லையா? என்பது தெரியாமல் அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். எனவே, மாயமான ஐந்து மீனவர்களை தேடும் பணியை மத்திய, மாநில அரசுகள் துரிதப்படுத்த வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்த தமிழ்நாடு மீனவர்களுக்குத் தலா ரூ.5 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். அதுபோக உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்களின் மறுவாழ்வுக்காகத் தேவைப்படும் வாழ்வாதார நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண்டும்.
விபத்தை ஏற்படுத்தி மீனவர்களுக்கு உயிரிழப்பை ஏற்படுத்திய சிங்கப்பூர் கப்பல் மீது இந்திய கப்பல் படை உரிய சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து வழக்கு முடியும் வரை சிங்கப்பூர் கப்பல் மங்களூர் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், ஏஐடியுசி மீனவர் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.