ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. திமுக ஆட்சிக்காலத்தில் ரூ. 616 கோடி செலவில் ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தினை செயல்படுத்தினர். பரமக்குடி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூர் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தினசரி 79.78 மில்லியன் லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. இதில், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 35 மில்லியன் லட்சம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. இதிலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டக் குழாய்கள் முறையாக பராமரிக்காததால் பல இடங்களில் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பாக பரமக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட நயினார்கோவில், பாம்பூர் உள்ளிட்ட பல இடங்களிலும் குழாய்கள் உடைந்து அருகிலுள்ள குளங்கள், ஊரணிகளில் நீர் நிறைந்து காணப்படுகின்றன. இதனால் தினசரி குடிநீர் வரத்து இன்றி வாரம் ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படுகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் குடிநீருக்காக காலிக்குடங்களுடன் பல கி.மீ., தூரம் அலைகின்றனர். பல ஆண்டுகளாக, குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யாமல் அரசு அலுவலர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாக, கூட்டுக்குடிநீர் திட்ட அலுவலர்கள், ஒன்றிய அலுவலர்கள் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்கையில், குடிநீர் குழாய்களைச் சட்ட விரோதமாக உடைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உடைப்புகளைச் சரிசெய்ய குடிநீர் வாரிய அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் கூறினர்.