ராமநாதபுரம் அரண்மனை அருகே எஸ். இன்போடெக் என்கிற ஐடி நிறுவனத்தை முகமது யூசுப் அலி, அராபத் அலி, யாசிர் முகமது மூவரும் கடந்த அக்டோபரில் தொடங்கியுள்ளனர்.
இதற்கு நேர்முகத்தேர்வு மூலம் 50-க்கும் மேற்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அழைப்புதவி மையங்களில் பணியில் அமர்த்தப்பட்டனர். இதில், 27 இளைஞர்களிடம் பாதுகாப்புத் தொகையாக தலா 30 ஆயிரம் ரூபாயும், கல்லூரி, பள்ளி சான்றிதழ்களும் பெறப்பட்டுள்ளன.
இரண்டு மாதங்கள் வேலைபார்த்த நிலையில் டிசம்பர் மாதம் நிறுவனத்தில் சீரமைப்புப் பணி நடப்பதால் முடிந்தவுடன் அழைப்பதாகக் கூறி அனைவரையும் அனுப்பியுள்ளனர். இரண்டு மாத ஊதியமும் கொடுக்கவில்லை.
பின் நிறுவனம் செயல்படவே இல்லை. சில நாள்களுக்குப் பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த இளைஞர்கள் நேரடியாகச் சென்று பணம் கேட்டபோது நிறுவனத்திலிருந்து காசோலை தரப்பட்டுள்ளது.
அந்தக் காசோலையும் வங்கியில் செல்லாது எனக் கூற, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் பணத்தை மீட்டுத் தரக்கோரி மனுவை அளித்தனர்.
அதில், இந்த நிறுவனத்தைத் தொடங்கிய முகமது யூசுப் அலி, அராபத் அலி, யாசிர் முகமது ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.
வேலை தருவதுபோல 27 இளைஞர்களிடமிருந்து தலா ரூ.30 ஆயிரம் பெறப்பட்டு நூதன முறையில் நடைபெற்றுள்ள இந்த மோசடி மக்கள் மத்தியிலும், படித்துமுடித்து வேலைதேடும் இளைஞர்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வனத்தை மீட்க வழிகாட்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு! - சிறப்புக் கட்டுரை