ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த விசைப்படகுகள் கரையோரங்களில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பது குறித்து நாட்டுப்படகு, பாரம்பரிய சிறு தொழில் மீனவர்கள் பலமுறை ராமேஸ்வரம், மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் நிர்வாகத்திடம் மனு அளித்துள்ள நிலையில், இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
ராமேஸ்வரம் மீன் வளத்துறை அலுவலர்களுக்கு தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களை நடுக்கடலில் வைத்து பிடிக்க பைபர் ரோந்து படகு வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் படகு பயன்படுத்தி நடுக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தும் படகுகளை இதுவரை கைது செய்யவில்லை.
இதனால் கரையோர மீன்பிடிப்பை நம்பி வாழும் பல ஆயிரம் நாட்டுப்படகு, சிறுதொழில் மீனவர்கள் முற்றாக தொழில் பாதிக்கப்படுவதால் தடைசெய்யப்ட்ட சுருக்குமடி, இரட்டை மடி மீன்பிடி முறையில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத மீன் வளத்துறை அலுவலர்களை கண்டித்தும் நேற்று (பிப். 18) சிறு தொழில், பாரம்பரிய மீனவர்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் முன் காதில் பூ சுற்றி சங்கு ஊதி நூதன முறையில் ஆர்பாட்டம் நடத்தினர். பின் அங்கிருந்து ஊர்வலமாக வந்த மீன் வளத்துறை அலுவலகம் முன் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.