கரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலைத் தடுக்க முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், கைகளை சுத்தமாக அடிக்கடி கழுவ வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
தமிழ்நாட்டில் 1300-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வணிக நிறுவனங்கள், மருத்துவமனை, வங்கி, பொதுமக்கள் கூடும் இடங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு வருபவர்களுக்கு, அந்த நிறுவனங்கள் சார்பாக சானிடைசர் வழங்கப்பட்டு, கைகளைச் சுத்தம் செய்த பின்னரே, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இம்மாவட்டத்தில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க 100-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் இயந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.
ஆனால், எந்த ஒரு ஏ.டி.எம் மையத்திலும் கைகளை சுத்தம் செய்ய சானிடைசர், கை கழுவத் தண்ணீர் வைக்கப்படவில்லை. ஒருவர் ஏ.டி.எம் பட்டன்களை பயன்படுத்திய பின் மற்றவர்கள் அழுத்தி வருகின்றனர். கரோனா நோய்த் தொற்று அனைத்திலும் சிறிது காலம் தங்கி இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், ஏ.டி.எம் மையங்களில் இது போன்று அடிப்படை பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல் இருப்பது, கரோனா நோய்த் தொற்று பரவலுக்கு வழி வகுக்கும். ஆகையால் வங்கிகள் தாங்களாகவே முன் வந்து சானிடைசர், கைகளைக் கழுவ தண்ணீர் வைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:கரோனாவால் பாதிக்கப்பட்ட புகைப்படக் கலைஞர்கள் வாழ்வாதாரம்!