ராமநாதபுரம்: தேவிப்பட்டினத்தில் 'மாநில தென்னை நாற்று பண்ணையில்’ தென்னை நெட்டை ரகம், நெட்டை x குட்டை ஓட்டு ரகங்களின் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. நெட்டை ரக தென்னங்கன்று ஒன்று 50 ரூபாய்க்கும், நெட்டை x குட்டை ஒட்டு ரகம் ஒன்று 80 ரூபாய்க்கும் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், தேவிப்பட்டினம் மாநில தென்னை நாற்றுப் பண்ணையினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா நேற்று (ஆகஸ்ட் 15) ஆய்வு செய்தார். தரமான தென்னங்கன்றுகள் உற்பத்திக்காக கொள்முதல் செய்யப்பட்டு, நிழல் காய்ச்சலிலுள்ள நெட்டை ரக நெற்றுகளையும், பதனக் குழியில் முளைக்கும் தருவாயிலுள்ள நெற்றுகளையும், நாற்றுப் படுகையில் உள்ள வாளிப்பான தென்னங்கன்றுகளை பார்வையிட்டார்.
ஆட்சியர் அறிவுறை
தரமான தென்னங்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட தொடர்ந்து நல்ல முறையில் பராமரிக்குமாறு அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியருடன் ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பிரவின் குமார் உடனிருந்தார்.
மேலும், ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் டாம் பி.சைலஸ், வேளாண்மை துணை இயக்குநர் சேக் அப்துல்லா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி , ராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மா.கோபாலகிருஷ்ணன், பண்ணை மேலாளர் அம்பேத்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 3 அடி உயர தென்னை மரம்: குலைகுலையாய் காய்க்கும் தேங்காய்