ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் ஜி. முனியசாமி ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் தீவிரமான வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இதற்கு மத்தியில் ஈடிவி பாரத் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.
கேள்வி: வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் எந்த அளவிற்கு உங்களுடைய தேர்தல் பரப்புரை சென்றுகொண்டிருக்கிறது?
பதில்: என்னுடைய பரப்புரை மிகத் தீவிரமாகச் சென்றுகொண்டிருக்கிறது. நான் இந்தத் தொகுதியைச் சார்ந்தவன். கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்குத் தேவையானதை களப்பணியாற்றிவருகிறேன். ராமநாதபுரம் தொகுதியில் உள்ள மக்கள் அனைவரையும் எனக்குத் தெரியும். எனவே எனக்கு உறுதியாக வெற்றி வாய்ப்பு உள்ளது.
கேள்வி: ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணிகள் களத்தில் உள்ள நிலையில் அமமுகவிற்கான ஆதரவு எந்த அளவு உள்ளது?
பதில்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் எனக்கு வாக்களிப்பார்கள்.
கேள்வி: நீங்கள் வெற்றிபெற்றால் எந்தத் திட்டத்தை முதலில் செயல்படுத்துவீர்கள்?
பதில்: குடிநீர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். காவிரி கூட்டுக்குடிநீர்த் திட்டத்தில் பல இடங்களில் குழாய்கள் உடைந்து உள்ளதால், அனைவருக்கும் நீர் சென்று சேரவில்லை. வெற்றிபெற்றவுடன் முதல் வேளையாக ராமநாதபுர மக்களுக்கு குடிநீரை கொண்டுசென்று சேர்ப்பேன்.
கேள்வி: அதிமுகவினர் உங்களுக்கு வாக்களிப்பார்களா?
பதில்: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களும், விசுவாசிகளும் கண்டிப்பாக எனக்கு வாக்களித்து வெற்றிபெற வைப்பார்கள்" என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.