ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்ன கீரமங்கலத்தில் தனியார் மில் இயங்கிவருகிறது. இங்கு 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மில் மூடப்பட்டது. இதன் காரணமாக இங்கு பணியாற்றிய தொழிலாளர்கள் வேலை இழந்தனர்.
தொழிலாளர்களுக்கு ஏப்ரல்,மே மாதங்களுக்கும் சேர்த்து ஊதியம் வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்களின் குடும்பங்கள் பசி, பட்டினியால் வாடி வருவதாகவும், இதே நிலை நீடித்தால் தங்களது குடும்பங்கள் பட்டினியால் இறக்க நேரிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மில்லுக்குள் அவர்களை அனுமதிக்க மறுத்ததால் மில்லின் கேட் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து நிலுவையில் இருக்கும் ஊதியத்தை விரைவில் வழங்குவதாக மில் நிர்வாகம் உறுதியளித்ததால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.