இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள அருள்மிகு மங்களநாத சுவாமி திருக்கோவிலில், தனி சன்னதியில் உள்ள மரகத கல்லால் ஆன நடராஜருக்கு ஆண்டு தோறும் ஆருத்ரா தரிசனம், அதாவது சுவாமி மீது பூசப்பட்ட சந்தனத்தை எடுத்து மீண்டும் பூசும் நிகழ்வு நடைபெறும்.
இந்நிலையில், காரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால், மாவட்ட காவல்துறை சார்பில் இந்தாண்டு திருவிழாவிற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கரோனா நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள அரசால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் திருவிழா காலத்தில் அனைவரும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
திருவிழாவிற்கு வெளியூர் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. குறிப்பிடப்பட்ட தரிசன நேரங்களில், கோயிலுக்குள் பக்தர்கள் 200 பேருக்கு மிகாமல் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். பக்தர்களிடம் இருந்து அர்ச்சனைத் தட்டுகள் பெற்று சடங்குகள் மேற்கொள்ளவும், கோயிலினுள் அன்னதானம் வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது. ஆருத்ரா தரிசன விழாவில் 10 வயதுக்கு கீழான குழந்தைகள் மற்றும் 65 வயதுக்கு கூடுதலான மூத்தவர்கள் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.
கோயில், ஊராட்சி நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து மகா அபிஷேகம் நடைபெறும் இடத்தின் அளவிற்கேற்ப, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு சீரான இடைவெளியில் வெளியேறுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் இவ்வுத்தரவுகளை கடைபிடித்து, பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்ற மார்கழி பௌர்ணமி பூஜை ரத்து