ராமநாதபுரம்: இந்தோனேசிய சிறையில், பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் கடந்த 15 நாள்களாக சிக்கித் தவித்துவருகிறார். அவரை மீட்டுத் தரக்கோரி குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த கோபால் - லட்சுமி தம்பதியரின் மகன் கவின். இவருக்குத் திருமணமாகி ரேவதி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன.
கடந்த பத்து ஆண்டுகளாக, சென்னையிலுள்ள தனியார் கம்பெனி மூலம் வெளிநாட்டில் பணிபுரிந்துவருகிறார். கப்பலில் பணிசெய்யும் அவர், ஜூன் 8 ஆம் தேதி விடுமுறை கிடைத்து இந்தோனேசியா துறைமுகத்திலிருந்து சொந்த ஊருக்குத் திரும்புவதற்காக, கவினும், அவருடன் வெளிமாநிலத்தைச் சேர்ந்த ஐந்து பேரும் புறப்பட்டனர்.
ஆறு பேரும் இந்தோனேசியா விமான நிலையம் சென்றனர். அங்கு அவர்களை குடியேற்ற அலுவலர்கள் விசாரணை செய்து, பாட்டம் என்ற இடத்தில் சிறைவைத்துள்ளனர்.
காரணம் ஏதும் கூறாமல், ஆறு பேரையும் இந்தோனேசிய அரசு கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிறைப்பிடித்து வைத்துள்ளது.
இதுகுறித்து கவினின் மனைவி ரேவதி கூறுகையில், "ஜூன் 8 ஆம் தேதி இந்தோனேசியா விமான நிலையத்தில் இருப்பதாகவும், 10 ஆம் தேதி மதுரை விமான நிலையம் வந்து விடுவேன் எனக் கூறினார்.
பின்னர் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதுகுறித்து அவர் பணிபுரிந்த கம்பெனியில் கேட்டபோது கவினை தனிமைப்படுத்தி இருப்பதாக கூறினர்.
அதில் நம்பிக்கை இல்லாததால் இந்தோனேசியா நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை அணுகியபோது, அவர் சிறையில் இருப்பதாகக்கூறி அதிர்ச்சி அளித்தனர்.
எங்களுக்கு நான்கு மாத குழந்தை உள்ளது. பிறந்த குழந்தையைக் கூட அவர் பார்க்கவில்லை. சிறையில் அவர் உணவிற்கு மிகவும் கஷ்டப்படுவதாக அங்குள்ள உறவினர்கள், நண்பர்கள் மூலம் தெரிய வந்தது.
கணவரை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன். சிறையில் உள்ள எனது கணவர் கவினை மீட்டு தமிழ்நாட்டிற்கு அழைத்து வர ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
இந்தோனேசியா சிறையிலுள்ள தனது கணவர் கவினை விரைவில் மீட்டுத் தர, அவரது மனைவி, குடும்பத்தினர் ஆட்சியரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: viral video: நிலத்தகராறு; சகோதரர்கள் சரமாரி மல்லுக்கட்டு