ராமநாதபுரம்: மதப்பிரசாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட இந்தோனேசியாவைச் சேர்ந்த எட்டு பேர் உட்பட 10 பேரை விடுதலை செய்து ராமநாதபுரம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தோனேசியாவில் இருந்து சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வந்த சைலானி, சித்திரோகனா, ரமலான் பின் இப்ராஹீம், அமன் ஜகாரியா, முகமது நசீர் இப்ராஹிம், கமரியா, மரியானா சுமிசினி ஆகிய எட்டு பேர் பிப்ரவரி மாதம் மத பிரச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு உதவியதாக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி, மூமின்அலி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது இந்திய பாஸ்போர்ட் சட்டம் பேரிடர் மேலாண்மை சட்டம் சுகாதார சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ராமநாதபுரம் ஜெ.எம். 2 நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த நிலையில், இன்று (அக்.1) இந்த வழக்கில், நீதிபதி ராதாகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் இதுவரை இவர்கள் சிறையில் இருந்த காலத்தைத் தண்டனைக் காலமாகக் கருதி, அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார். மற்ற இருவருக்கு 7 ஆயிரம் அபராதம் விதித்தார்.