ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஊராட்சி அலுவலகம் முன்பு 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து மாநில பொதுச்செயலாளர் நூர்ஜகான் கூறுகையில்,"சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால், தற்போதுவரை தமிழ்நாடு அரசு சார்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால், மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறோம்.
தமிழ்நாடு அரசு, தொடர்ந்து எங்களுடைய கோரிக்கைகளை புறக்கணித்தால் பொதுக்குழுவை கூட்டி வருகின்ற தேர்தலில் பணி செய்வதா இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும்" என்றார்.
இந்த போராட்டத்தால், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்