ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக்-நீரிணை கடல் பகுதியில் பல்வேறு வகையான அரியவகை உயிரினங்கள் வாழ்ந்துவருகின்றன. இவற்றில் மிக முக்கியமாக கடலை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டுவரும் சித்தாமைகள், அந்தப் பகுதியில் அதிகளவில் வாழ்ந்துவருகின்றன.
இவை நவம்பர் மாதம் தொடங்கி ஜனவரி கடைசிவரை தனுஷ்கோடி முதல் அரிச்சல்முனை வரையிலான கடல் பகுதியில் குழி தோண்டி முட்டையிட்டுச் சென்றுவிடும். அந்த முட்டைகளை வனத் துறையினர் பாதுகாப்பாக எடுத்து முட்டை பொரிப்பகத்தில் வைத்து அதில் பொரிந்தபின் மீண்டும் சித்தாமை குஞ்சுகளை கடலில் விடும் பணியைச் செய்துவருகின்றனர்.
10,700 ஆமை முட்டைகள்
நேற்றுவரை (மார்ச் 5) 10 ஆயிரத்து 700 முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த 52 நாள்களுக்கு முன்பாக எடுக்கப்பட்ட 132 முட்டைகள் பொரிந்த நிலையில், சித்தாமை குஞ்சுகளை மண்டபம் வனச்சரகர் வெங்கடேசன் தலைமையிலான அலுவலர்கள், கடலில் விட்டனர். அந்த ஆமைகள் ஊர்ந்துசென்று கடலுக்குள் சென்ற நிகழ்வு பார்ப்பதற்கு அற்புதமாகவும், அழகாகவும் இருந்தது.
கடலில் விடும் பணி
இது ஆமைகள் முட்டைப் பொரிக்கும் காலநிலை ஆகும். ஏற்கனவே கடற்கரை மணலைத் தோண்டி வனத் துறையினர் ஆமைகளின் முட்டைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதைத்தொடர்ந்து, பொரியும் ஆமைக் குஞ்சுகளை தொடர்ந்து வனத் துறையினர் கடலில் விடுவதற்குத் திட்டமிட்டுள்ளனர்.