இராமநாதபுரம்: கரோனா ஊரடங்கினால் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில் கடந்த மார்ச் 24 முதல் மூடப்பட்டு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டிலுள்ள அனைத்து வழிபாட்டு தலங்களிலும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கலாம் என அரசு அறிவிப்பு வெளியிட்டதையடுத்து, இராமநாதசுவாமி கோயிலிலும் சாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கோயிலிலுள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவதற்கான தடை நீடித்து வருகிறது.
வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூர்வாசிகள்:
இதனால், இராமேஸ்வரம் வரும் பக்தர்கள் தங்களது ஆன்மிகக் கடமைகளை நிறைவேற்ற முடியாமல் தவித்தனர். தீர்த்தம் திறக்கப்படாததால், பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்துபோனது. இதனால் பக்தர்களை நம்பியிருக்கும் உள்ளூர் தொழிலாளிகள், வியாபாரிகள், தங்கும் விடுதி நடத்துபவர்கள், யாத்திரைப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரும் வருவாய் இழந்து மாற்றுத் தொழிலை நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்களில் நீராட பக்தர்களை அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கோயில் வாயிலின் முன்பு நேற்று நூதனப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அக்கட்சியின் தாலுகா செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், அக்கட்சியினர் அக்னி தீர்த்தத்தில் நீராடி அங்கிருந்து ராமநாதசுவாமி கோயிலின் கிழக்கு வாயில் பகுதிக்கு ஊர்வலமாக வந்தனர்.
தீர்த்தங்களைத் திறக்க வலியுறுத்தி கோஷமிட்ட அவர்கள், தாங்கள் எடுத்து வந்திருந்த அக்னி தீர்த்தத்தினை தலையில் ஊற்றியபடி நூதனப் போராட்டம் நடத்தினர். பின்னர் ராமநாதசுவாமி கோயிலுக்குள் செல்லமுயன்ற அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: காலவரையற்ற வேலைநிறுத்தம், அரசு அலுவலகம் முற்றுகை: ராமேஸ்வரம் அப்டேட்