இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் நினைவு தினம் நேற்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்பட்டது. அதில் நான்கு ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தேவேந்திர பண்பாட்டு கழக மகால் அருகில் மாவட்ட நிர்வாகத்தால் விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி அஞ்சலி செலுத்த வந்த 30 நபர்களில் சிலர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பாதுகாப்பு பணியில் உள்ள காவலர்களுக்கு உணவு பொருள்களை எடுத்து சென்ற காவல்துறை வாகனத்தை தடுத்து நிறுத்தி அதன் மீது ஏறி நின்றும், கோஷங்கள் எழுப்பியும் கொடிகளை உயர்த்தி காண்பித்தும் சிலர் அநாகரீக செயல்களில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து பொது அமைதிக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் செயல்பட்டதாக கூறி 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது இச்செயலில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அருண் பாண்டி, சண்முகபாண்டியன், நாகநாதபுரம், மணிகண்டன் பவத்குமார் உள்பட பலர் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து மாவட்ட எஸ்.பி, டிஐஜி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இதில் ஈடுபட்ட மற்ற நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அனுமதி பெறாமல் வந்த 140 நான்கு சக்கர வாகனங்கள், 60 இருசக்கர வாகனங்கள், 13 அமைப்புகள், 6 கிராமங்களை சேர்ந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை கண்டறியும் வகையில் வீடியோ பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக, திமுக சார்பில் மரியாதை!