ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகேவுள்ள மாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் குடும்ப வறுமை காரணமாக 2018 ஆம் ஆண்டு சவூதி கெயில் விமான நிலையம் அருகே உள்ள பக்கா என்ற இடத்தில் ஆதி தோரிஸ் என்ற அரபியிடம் தோட்ட வேலைக்குச் சென்றிருந்தார்.
ஆனால், அழைத்துச் சென்ற நிறுவனம் நாகராஜன் பாஸ்போர்டை பறித்துக்கொண்டு, அங்குப் பாலைவனத்தில் சம்பளமின்றி ஒட்டகம் மேய்க்கும் பணியில் கொத்தடிமையாகக் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக வேலைக்கு அமர்த்தியதாகக் கூறப்படுகிறது.
நாகராஜன் அனுப்பும் பணத்தை நம்பி இங்கு அவரின் குடும்பம் வாழ்ந்துவருகிறது. இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாகச் சம்பளம் வழங்கவில்லை. மேலும் குடும்பத்துடன் பேச அரபி அரசு அனுமதிப்பதும் இல்லை. கடந்த 15 நாள்களுக்கு முன்பு நாகராஜன் அவரது நண்பரின் தொலைபேசியில் இது குறித்து மனைவியிடம் கூறியுள்ளார். மேலும் வெளியில் செல்ல அரபி அனுமதிப்பதில்லை என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, மனைவி முனீஸ்வரி இன்று (அக்-12) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று தனது கணவரை மீட்கக் கோரியும், மேலும் வேலை பார்த்ததற்குச் சம்பளத்தைக் கொடுக்க கோரியும் கண்ணீர் மல்க மனு அளித்தார்.
இதையும் படிங்க: ஊதிய உயர்வு கோரி தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்