ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியிலிருந்து உப்பூர் நோக்கிச் சென்ற இருசக்கர வாகனமும் அனல் மின் நிலையம் நோக்கிச் சென்ற மற்றொரு இருசக்கர வாகனமும் நாகனேந்தல் விலக்குரோடு பகுதியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பாண்டித்துரை (வயது 32), செந்தில்குமார் (வயது 19), ஹரிஹரன் (வயது 19) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இரண்டு பேர் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
இதில், சிகிச்சைச் பலனின்றி கௌதம் (வயது 19) உயிரிழந்தார். மேலும் உதயக்குமார் (வயது 37) உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைப்பட்டார்.
உயிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து திருப்பாலைக்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து நிகழவில்லை, நான்கு சக்கர வாகனம் மோதிதான் விபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இதனைக் காவல் துறை மறைத்து இருசக்கர வாகனங்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் கூறி, உயிரிழந்தவர்களின் உடல்களை வாங்க மறுத்து அவர்களது உறவினர்கள், காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, இது குறித்து தகவலறிந்து அங்கு வந்த கூடுதல் கண்காணிப்பாளர் லியோனல் இக்ணேஷியஸ் பாத்திக்கப்பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கிச் சென்றனர்.