ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு கடல் பகுதிகளில் தொடர்ந்து இரட்டைமடி வலை பயன்பாடு என்பது இருந்து வருகிறது. இதனை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் கடல் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்டது.
எனினும் இதற்கு முறையான நடவடிக்கை மீன்வளத் துறையில் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும் தமிழ்நாடு அரசால் 1983-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தையும் முறையாக கடைபிடிக்கவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இதனை கண்டித்து ராமேஸ்வரத்தில் உள்ள மீன்வளத் துறை அலுவலகம் முன்பாக இன்று (பிப்.26) கடல் தொழிலாளர் சங்கத்தினர் சவப்பெட்டி ஏந்தியும், சங்கு ஊதியும் பேரணியாக வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்பதை தடை செய்ய வேண்டும். தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள் வைத்தனர். இதற்கு கடல் தொழிலாளர் சங்க செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார்.
இதையும் படிங்க: 'மீன் உணவுத் திருவிழா' - இன்றுமுதல் தொடக்கம்