ராமநாதபுரம் மண்டபம் பேரூராட்சி தோப்புக்காடு - தோணித்துறை கிராமத்தில் மக்கள் குடியிருப்பு பகுதியில் அரசு அனுமதியின்றி சட்ட விரோதமாக செயல்படும் தனியார் உல்லாச கேளிக்கை விடுதியை அப்புறப்படுத்த வலியுறுத்தி கடல் தொழிலாளர் சிஐடியு சங்கம் சார்பில் மீன்பிடி வலைகள், மிதவைகளை பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்து காத்திருப்பு போராட்டம் நடந்தது.
கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கருணா மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தோப்புக்காடு கிராமத்தலைவர் பால்சாமி, ராமநாதபுரம் வட்டாட்சியர் முருகவேல், காவல் ஆய்வாளர் ஆகியோர் கடல் தொழிலாளர்களிடமும், கிராம மக்களிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து பேசிய கடல் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.கருணா மூர்த்தி, "கேளிக்கை விடுதிக்கு அரசு அளித்துள்ள அனுமதி ஆணையை வருவாய் அலுவலர்கள், பேரூராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த விடுதி முறைகேடாக செயல்பட்டிருப்பின், கேளிக்கை விடுதிக்கு சீல் வைத்து, விடுதி நிர்வாகம் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதி நிர்வாகத்திடம் அனுமதி இருப்பினும் மக்களுக்கு இடையூறாக உள்ள கேளிக்கை விடுதி தொடர்ந்து செயல்பட தடை விதிக்கவேண்டும்.
இல்லையெனில், பல்வேறு கட்ட போராட்டங்கள் மீண்டும் நடத்தப்படும்" என்று எச்சரித்தார்.
இதையும் படிங்க: நாகையில் வலுக்கும் மீனவர் போராட்டம், பெருகும் ஆதரவு!