ராமநாதபுரம் மாவட்டம், பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் தங்கவேல். தேவிப்பட்டினம் பகுதியில் மீன்பிடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல் தேவிப்பட்டினத்தை அடுத்த கிருஷ்ணாபுரம் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றார். ஆழ்கடலில் மீன்பிடிக்க வலை வீசும்போது, எதிர்பாராத விதமாக, அவரது கால் வலையில் சுற்றியதால், தவறி கடலில் விழுந்துள்ளார். வலையிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்த தங்கவேல், கடலிலேயே மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
அவரின் உடலைக் கைப்பற்றிய தேவிப்பட்டினம் காவல் துறையினர், ராமநாதபுரம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.